தமிழகம்

அடிமைசாசனம் கேட்கும் ஒப்பந்ததாரர்! தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்! தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண ஏஐடியுசி வலியுறுத்தல்!

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமையில் தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளர் ம.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் (House Keeping), பாதுகாவல் பணியாளர்கள் (Security) என 132 ஒப்பந்த தொழிலாளர்கள் பல்லாண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 2022 மே மாதம் முதல் QPMS என்ற குவாலிட்டி பிராபர்டி மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் (பி) லிட்., என்ற ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திற்கும் (TNMSC), QPMS ஒப்பந்த நிறுவனத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதன்படி, இவர்களுக்கு 2021-2022 ஆம் ஆண்டுக்கு நாளொன்றுக்கு ரூ.693/-ம், 2022-2023-ஆம் ஆண்டுக்கு நாளொன்றுக்கு ரூ.707/-ம் ஊதியமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், QPMS ஒப்பந்த நிறுவனம் நாளொன்றுக்கு ரூ310/- வீதமே ஊதியம் வழங்கி வருகிறது. ஆகவே, மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கக்கோரி தொழிலாளர்கள் போராடி வந்தனர்.

இந்நிலையில், நாளொன்றுக்கு சுமார் ரூ.395/- வீதம் மாதம் ரூ.11,840/- ஊதியம் வழங்கப்படும் என கடந்த 21-12-2022 அன்று ஒரு 18(1) ஒப்பந்தம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தெரியாமல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தில் நாளொன்றுக்கு சுமார் ரூ.300/- குறைவாக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோத ஒப்பந்தம் மட்டுமல்ல, தொழிற்தாவா சட்டப்படியே கூட ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குப் பொருந்தாது. ஆனால், இந்த சட்டவிரோத ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததற்காக ஏ.கல்பனா உள்ளிட்ட 6 தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 25-01-2023 அன்று ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் (RDO), ஈரோடு நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP), அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் (Superintendent) மற்றும் உறைவிட மருத்துவ அலுவலர் (RMO) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் QPMS ஒப்பந்த நிறுவனத்திற்கும், ஏஐடியுசி தொழிற்சங்கத்திற்கும் இடையில் ஒரு சமரச உடன்பாடு ஏற்பட்டது. அதாவது வேலை மறுக்கப்பட்ட மற்றும் ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 16 தொழிலாளர்களுக்கும் முழுச் சம்பளத்துடன் 30-01-2023 முதல் பழையபடி வேலை வழங்கப்படும் என்றும், 15 தினங்களுக்குள் தொழிற்சங்கத்தின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் QPMS நிறுவனம் கடிதம் மூலம் உறுதிமொழி அளித்தது.

ஆனால், தான் அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற தொழிலாளர்களுக்குப் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வந்த ஒப்பந்த நிறுவனம் மொத்தத்தில் அடிமை சாசனம் எழுதித் தருமாறு அடம்பிடிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது என்பதும் அரசியல் அமைப்புச் சட்டம் கொத்தடிமை முறையில் இருந்து தொழிலாளர்கள் தற்காத்துக் கொள்ளும் உரிமையை அடிப்படை உரிமையாக ஏற்றுக் கொண்டுள்ளது என்பதையும் கூட ஏற்க மறுக்கும் அளவுக்கு சட்டத்தை மீறும் வாய்ப்பும், துணிச்சலும் கொண்டதாக ஒப்பந்ததாரர் நிறுவனம் திகழ்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனேதும் இல்லை.

ஆகவே, QPMS ஒப்பந்த நிறுவனத்தின் நேர்மையற்ற, சட்ட விரோத, தொழிலாளர் விரோத, பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து, 31-01-2023 காலை 10.00 மணி முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும், தமிழ்நாடு ஏஐடியுசி செயலாளரும், தொழிற்சங்கத்தின் தலைவருமான எஸ்.சின்னசாமி தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றணர்.

தொழிலாளர்களைச் சுரண்டுவது யாரொவருவருவருக்கும் பிறப்புரிமை அல்ல; சுரண்டலில் இருந்து தற்காத்துக் கொள்வது அரசியல் அமைப்புச் சட்டம் தொழிலாளர்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமை என்பதை இந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு உணர்த்தி தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்ய, தமிழ்நாடு அரசும், மருத்துவத்துறையும் உடனடியாக தலையிட்டு தக்க தீர்வு காண முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு ஏஐடியுசி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளர் ம.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எஸ்.சின்னசாமி தொடர்பு எண்: 94425 22355
ம.இராதாகிருஷ்ணன் தொடர்பு எண்: 9486362703

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button