அஜய்மிஸ்ரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேரணி
புதுதில்லி, டிச.21- லக்கிம்பூர் கெரி விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என செவ்வாயன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து விஜய் சவுக் வரை எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டன. வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடந்த போராட்டத்தின்போது லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்றது திட்டமிட்ட சதி எனவும், அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஒன்றிய அமைச்சர் பதவியிலிருந்து அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என செவ்வாயன்று இரு அவைகளி லும் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பிய நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து விஜய் சவுக் வரை பேரணி சென்ற னர். இந்த பேரணியில் காங்கிரஸ், திமுக, சிவசேனை உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக லக்கிம்பூர் கெரி விவசாயிகள் படுகொலை விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்பி தீபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் ஒத்தி வைப்பு நோட்டீஸ் கொடுத்தனர். மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தார். அதனை ஏற்க மறுத்து அவைத் தலைவர்கள் அவையை 2 மணி வரை ஒத்தி வைத்தனர்.