‘அக்னிப் பாதை’ திட்டத்தை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய இராணுவப் பணிகளில் ஆட்கள் சேர்ப்புக்கான செயல்முறை, பணிச் சூழல் மற்றும் அது குறித்த விதிமுறைகளைச் சீரழிக்கும் மோடி அரசாங்கத்தின் நடவடிக்கையைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:
இந்திய இராணுவத்தில் இளைஞர்களைச் சேர்த்து, இராணுவத்தைப் பலப்படுத்த உள்ளதாகக் கூறி ‘அக்னிப் பாதை’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் மோடி அரசாங்கத்தின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு நிராகரிக்கிறது.
இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் பணிச் சூழல் மற்றும் அது தொடர்பான விதிமுறைகளை நீர்ந்து போகச் செய்தால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கட்சி கருதுகிறது.
குறுகிய கால வேலைவாய்ப்பு அடிப்படையில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, அரசாங்கக் கருவூலத்தின் நிதியைக் கொண்டு அவர்களுக்கு முழு அளவிலான பயிற்சி அளிப்பது மற்றும் ஒப்பந்த முறையில் பணிக்கு நியமனம் செய்வது ஆகியவை இராணுவச் சேவைகளின் தரத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி முழு அளவில் பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களுக்கு தகுந்த வேலை கிடைக்காத சூழலில் அவர்களது வருங்காலமும் பாதிப்புக்கு உள்ளாகும்.
இந்திய இராணுவத்தில் பணி நியமனம், பதவி உயர்வு மற்றும் இன்ன பிறவற்றுக்கு தற்போது நடைமுறையில் உள்ள செயல்முறைகளை அரசாங்கம் சீரழிப்பதைக் கட்சி கண்டிக்கிறது.
‘அக்னிப் பாதை’ திட்டத்தை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் காலிப் பணியிடங்களை நிரப்பிட தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளையே பின்பற்றிட வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.