அக்டோபர் 2 – தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் – சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கம்
அன்புமிக்க தோழர்களே,
வணக்கம்!
அண்மைக்காலமாக ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, சங் பரிவார் அமைப்புகள் தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை விதைத்து, சமூக அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
புராணங்களில் விநாயகர் பிறப்பு குறித்து கூறப்பட்டிருக்கும் செய்தியைக் கூட்டத்தில் பேசியதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செயலாளர் தோழர் இரா. முத்தரசன் மீது சங் பரிவார் கும்பலைச் சேர்ந்தவர்கள், மதவெறி சக்திகள், சமூக ஊடகங்களில் எழுத்தில் வடிக்க முடியாத, காதுகளில் கேட்க முடியாத, ஆத்திரமூட்டும் வசவுப்பதிவுகள் போட்ட இழிசெயலில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், தி மு கழகத்தின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவர் திரு ஆ. ராஜா, மனுதர்மத்தில் ‘சூத்திரர்கள்’ குறித்து சொல்லப்பட்டிருக்கும் ஆபாசமானதும், அசிங்கப்படுத்துவதுமாக கூறப்பட்டிருக்கும் செய்திகளை எடுத்துக் கூறியதை, ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்து முன்னணி, சங் பரிவார் கும்பல்கள் திரித்துக் கூறி, பகை அரசியல் வளர்க்கும் தீய செயலில் ஈடுபட்டு வருவதை அறிவீர்கள்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து, தமிழ்நாடு அரசு அதிகாரத்தை, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சங்பரிவார் கும்பலின் பிடியில் இருந்து மீட்டு, தி.மு.கழகம் சமூகநீதி சார்ந்த, ஜனநாயக ஆட்சி அமைத்தது. 2021 ஆம் ஆண்டு புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து, இந்த ஆட்சிக்கு எவ்வளவு நெருக்கடிகளை கொடுக்க முடியுமோ அவ்வளவு நெருக்கடிகளையும் ஒன்றிய அரசும், பா.ஜ.கவும், சங் பரிவார் அமைப்புகளும் கொடுத்து வருகின்றன. இந்த அமைப்புகளின் சட்டமீறல் நடவடிக்கைகளுக்கு ஆளுநர் மாளிகை ஆசி வழங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசின் நிதித்துறை அமைச்சர் திரு பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்த மதுரை விமான நிலையம் சென்றபோது, தேசியக் கொடி பறந்து கொண்டிருந்த, அவரது கார் மீது செருப்பு வீசி, தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் யார், எவர் என்பதை, அவரது ஆதரவாளர்களே அடையாளம் காட்டினர்.
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டில் ஆதாயம் தேடி, வெறிபிடித்து அலையும் ஆர்.எஸ்.எஸ் – சங் பரிவார் கும்பல் வன்முறை அரசியலைத் தீவிரமாக்கி, இந்து மதத்தின் பெயரால் சமூக அமைதியைச் சீர்குலைத்து வருகின்றன.
இந்து மத சாஸ்திரங்களில் மூழ்கி, கரையேறிய, செங்காவி சிங்கம், வங்கம் தந்த மேதை விவேகானந்தர், அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரை நிகழ்த்திய போது, “உலக மதங்களின் தாய் மதமாம், இந்து மதத்தின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன்” என பெருமை பொங்க, எல்லா மதங்களும் அன்பைப் போதிக்கும் செய்திகளை வரிசைப்படுத்திக் கூறினார்.
சிற்றாறுகள் சேர்ந்து நதியாவது போல், பல நதிகளும் மகா சமுத்திரத்தில் கலந்து விடுவது போல், சமய மார்க்கங்கள் (வழிகள்) பலப் பலவானாலும், அவைகள் அனைத்தும் அன்பு, மனிதநேயம் என்ற ஓர்மையில் நிலைபெறுவதைப் பல மகான்கள் எடுத்துரைத்துள்ளனர்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் என்ற மதவெறி அமைப்பு ‘ இந்து ராஷ்டிரம் ‘ என்ற புனைவு கருத்தியலை அரசியல் தளத்தில் முன்வைத்துப் பரப்புரை செய்து, பெரும்பான்மை மக்களின் மரபு சார்ந்த நம்பிக்கையான இந்து சமயத்தை, மதவெறியூட்டும் ‘மதுவாக’ மாற்றிவிட்டது.
மனுதர்மம் போதிக்கும், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற வர்ண வகைப்பாடும், இந்த வர்ண வகைப்பாட்டை நிரந்தரமாக்க உருவாக்கிய சாதிய அடுக்குமுறை கட்டமைப்பும், சமூக செல்வத்தை அபகரிக்கும் கார்ப்ரேட் சக்திகளின் லாப வேட்டைக்கு உதவும் ஆயுதங்களாகியுள்ளன.
அரசியல் அதிகாரத்தின் துணையோடு, கார்ப்ரேட் சக்திகளும், மதவெறி, சாதிவெறி கும்பல்கள் இன்று ஆர்எஸ்எஸ் பரிவாரங்களாக செயல்படுகின்றன.
இராமாயண காப்பியத்தின் நாயகன் இராமரைக் கடவுளாக்கி அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற பரப்புரை செய்து, பாபர் மசூதியைத் தகர்த்த வன்முறையால், ஆர்எஸ்எஸ் அதிகாரத்தை எட்டிப் பிடித்துக் கொண்டது.
சிறுபான்மை மக்களை, குறிப்பாக, இஸ்லாமிய இனத்தை அழித்துவிட வேண்டும் என்று ஹரித்துவார் மாநாட்டில் இந்து சாமியார்கள் கொலைவெறி பிடித்து ஆடியதை நாடு மறந்துவிடவில்லை .
இப்போது தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டுவீச்சுக்கள் – நடுநிசி வேளைகளில் வீடுகளில் கல்வீசி, ஊர் மக்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு, கொலை, கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகளின் செயல்களையே நினைவூட்டுகின்றன. அவர்கள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டியவர்கள்.
ஆனால், இந்தச் சம்பவங்களைக் காரணம் காட்டி சமூக அமைதியைச் சீர்குலைப்பதை எப்படி நாம் அனுமதிக்க முடியும் ? அமைதி சீர்குலைந்தால் வாழ்க்கைமுறை உடைந்து போகும். இழப்புகளும், துயரங்களும், மரண ஓலங்களும் வாழ்க்கை அவலமாகும்.
மனிதத்தை மதிக்கும் எவரும் மதவெறியை, சாதிவெறியை ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். அதன் அடையாளம் தான் அக்டோபர் 2 அன்று அகிம்சா மூர்த்தி, அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளில் அமையும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் ஆகும்.
கரம் கோர்ப்போம் வாருங்கள்! சாதி, மத வேற்றுமைகளை மறந்து, மனிதர்கள் அணியாகி, ஒருவரோடு ஒருவர் கரங்களை இறுகப் பற்றி, உரத்த குரலில் முழங்குவோம்!
மனிதநேயம் காக்க, உயிர் ஈகை செய்யத் தயங்க மாட்டோம்..!
வெறுப்பு அரசியலை வேரறுப்போம்!
சனாதன கருத்துகளை அழித்தொழிப்போம்!
சமூகநீதி, ஜனநாயகப் பயிர் காத்து, வளர்த்தெடுப்போம்!
நா. பெரியசாமி,
மாநில துணைச் செயலாளர்.