கட்டுரைகள்

அக்கினிக் குஞ்சு

– கணபதி இளங்கோ

“ஏழை உழவனை இயக்கத்தில் திரட்டி /எவரும் காணா எழுச்சியை மூட்டி/வீரத் தலைவா நீ வளர்த்தாயே/ பி.எஸ். ஆரே எமை பிரிந்தாயே” என்று 1961 செப்டம்பர் 30 அன்று தோழர் பி. எஸ். ஆர் மறைந்தபோது துயரக் கடலில் மூழ்கிய மக்கள் வெள்ளத்தில் பாவலர் வரதராசன் பாடிய பாடல் வரிகள் இவை. அவரது குறுகிய வாழ்நாளில் விவசாய அரங்கத்தில் பதினெட்டு ஆண்டுகளே அவர் செயல்புரிந்திருந்தாலும் பல புதிய வரலாறுகளை படைத்தவர். “தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்” என்று விவசாய தொழிலாளர்களை அணிதிரளச் செய்து வெற்றியே கண்டவர். சந்திரனும் சூரியனும் வருண பகவானும் கூடிக் குலாவும் ஓட்டை குடிசையில் நுலங்கித் தவித்த வக்கற்ற மக்களுக்கு வரமாய் வந்தவர். சுரைக் கொடியேறிய குடிசைகள் மீதில் செங்கொடி பறந்திட தூண்டிய புரட்சிப்படை தளகர்த்தன் பி.எஸ்.ஆர் ஆவார். யாரும் பயணிக்காத பாதையில் தாமே புதுப் பாதை சமைத்து பயணித்தார்.

சென்னை மாகாணத்தில் 1936 காங்கிரஸ் கட்சிக்குள் அமீர் ஹைதர் கான் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட எட்டு பேர் கொண்ட கம்யூனிஸ்ட் குழுவில் அவரும் ஒருவர். ( தோழர்கள் எஸ்.வி. காட்டே, ப. ஜீவானந்தம், ஏ. எஸ். கே , பி.எஸ். ஆர், சி. எஸ் , நாகை முருகேசன், டி. ஆர். எஸ் ஆகியோர் இருந்து செயல்பட்டனர். ) அந்நாட்களில் அந்நியத் துணிகள் பகிஷ்காரப் போராட்டம் நடத்தி பலமுறை காவல் துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டவர் பி.எஸ்.ஆர். ‘நியூ ஏஜ்’ பத்திரிகையை பொறுப்பு ஏற்று நடத்தியவர். அதன் அலுவலகம் பிராட்வேயில் இருந்தது. அதை மக்கள் “ஸ்ட்ரைக் ஆபீஸ்” என்று அழைத்தனர். நான்கைந்து தோழர்கள் கூடி கடற்கரையில் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் கூட்டம் நடத்த காவல்துறை எண்ணிக்கையே மிகுதியாக இருக்கும். ஆனால், பல மணி நேரங்கள் விவாதித்து ஆலோசனை கூட்டத்தை பி.எஸ்.ஆர் நடத்துவார் என்று அவருடன் பயணித்த தலைவர்கள் நினைவு கூர்கிறார்கள். அந்நாட்களில் மூக்குப்பொடி தொழிலாளர் சங்கம் , கள் இறக்கும் தொழிலாளர் சங்கம் அமைய பாடுபட்டதுடன் பல போராட்டங்களை தோழர் நாகை முருகேசனுடன் சேர்ந்து நடத்தினார்.

அவர் மார்க்சிய நூல்களை ஆழப் பயின்றவர். லெனினின் “நாட்டுப்புற ஏழை மக்களுக்கு” என்ற நூல் அவர் மீது தாக்கம் செலுத்தியது. மேலும், இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் எழுதியவற்றைப் பயின்றதுடன் இந்தியப் புரட்சியின் திறவுகோலாக இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் கூறிய கருத்துக்கள் அமைந்திருக்கக் கண்டார். உலகின் பல பகுதிகளிலும் சாதியின் வடிவங்கள் காணப்பட்டாலும் அதன் துலக்கமான வடிவம் இந்தியாவில் காணப்படுகின்றது. வேலைப் பிரிவினை தான் சாதி உருவாக காரணமாய் இருந்தது. கண்டிப்பான அகமண முறையும் திட்டவட்டமான பரம்பரை தொழிலுடன் கூடிய இணைப்பும் சாதி அமைப்புக்கு அடிப்படை ஆகின்றன. இந்த வேலைப்பிரிவினை அடிப்படையிலான கிராம சமுதாயங்கள் சாதி அலகுகளை கொண்டவையாக நிலைத்தன. இவை சுய தேவை பூர்த்தி கிராம சமுதாயங்கள் என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். இச்சமூகத்தில் ஒரு பகுதியினர் விவசாயத்திலும் கைவினைத் தொழில் முதலியவற்றில் வெவ்வேறு சமூக உறுப்பினர்களும் ஈடுபடுவர். அவர்களுக்கு அறுவடையில் ஒரு பகுதி தரப்பட்டது. அவர்கள் தமது சேவை அல்லது கைவினைப் பொருட்களை விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு அளிப்பர். இத்தகைய சமூக உழைப்பின் அமைப்பு முறை கிராம சமூகத்தின் அக உறவுகளைப் பேணி வளர்த்தது. இதனால் குறிப்பிட்ட சாதியில் பிறந்த ஒருவன் அதில் நிரந்தர உறுப்பினனாக இருப்பதையும் அவன் செய்ய வேண்டிய வேலைகளையும் முன் கூட்டியே விதித்தது. இந்திய வர்ணத்தை ஏற்றுக் கொண்ட சாதி முறையானது கிராம சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும் உழைப்பில் பங்கெடுக்கும் படியான ஸ்தூலமான சட்டங்களை வர்ணக் கொள்கையாக வகுத்துத் தந்து சட்டமாக்கி நடைமுறைப்படுத்தியது. எனவே, சாதி என்பது காலப்போக்கில் சட்ட வடிவில் நிலைப்படுத்தப் பட்டு மத ரீதியாகவும் சட்ட நூல்கள் மூலமாகவும் விதித்து சுரண்டலை உறுதிப்படுத்த துணைபுரிந்தன என்பது மார்க்சிய நோக்காகும்.

இந்திய சமூக அமைப்பை தெளிவாக புரிந்து கொள்வதன் மூலமே நடைமுறையில் இந்திய புரட்சியை நிகழ்த்த முடியும் என்று உணர்ந்த பி.எஸ்.ஆர் தம்முடைய எழுத்துக்கள் அனைத்திலும் ‘சுய தேவை பூர்த்தி கிராம சமுதாயம்‘ பற்றி விளக்க தவறியதில்லை. குல, இனக்குழு, சாதி ஆகிய வடிவங்களில் வர்க்கங்களே சாதிகளாகப் பரிணமித்தன. வேலைப் பிரிவினை தான் சாதி அமைப்பு உருவாக காரணமாக இருந்தது. எனவே, இந்திய சமூக அமைப்பில் எந்த சாதியாக இருந்தாலும் உழைப்புச் சக்தியின் அடிப்படையில் வர்க்கங்களாக திரட்டுவதன் மூலமே, போராடுவதன் மூலமே வர்க்க பேதமற்ற சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை படைக்க முடியும். புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற தத்துவத் தெளிவுடன் அவர் கீழத் தஞ்சைக்கு புறப்பட்டுச் சென்றார். ஓடும் குடிகளாக, உழு குடிகளாக இருந்து கொடும் துன்பங்களை அனுபவித்து வரும் ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களுக்கான போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்தார். விவசாய சங்கத்தை கட்டி அமைத்து அம்மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தினார்.

சவுக்கடி, சாணிப்பால் முதலிய பல கொடுமைகளுக்கு முடிவு கட்டப்பட்டது. 1. ஜமீன்தாரி ஒழிப்பு 2. இனாம்தாரி ஒழிப்பு 3. சாகுபடியாளர் பாதுகாப்புச் சட்டம் 4. நியாய வாரச் சட்டம் 5. கை ஏர், மாட்டு ஏர், வார விவசாயிகள், பேத்து வார விவசாயிகள் சட்டம் 6. நில உச்சவரம்பு சட்டம் 7. குடியிருப்புமனைப் பாதுகாப்புச் சட்டம் 8. கடன் நிவாரணச் சட்டம் என்று இன்னும் பல சட்டங்கள், நிவாரணங்கள் விவசாயிகள் இயக்கப் போராட்டங்களின் விளைவாகவே வந்தன. காவிரிப்படுகையில் தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்க உழு குடி மக்களை வர்க்கமாய் திரட்டி சங்கமாக்கியதன் விளைவாகவே இது சாத்தியமாயிற்று. “பறையன் கட்சி” என்று கம்யூனிஸ்ட் கட்சி இகழப் பட்டது. ஆனால், கட்சியின் உயிர் சாதியால் விதிக்கப்பட்ட, தண்டிக்கப்பட்ட உழைக்கும் மக்களை வர்க்கமாக அணி திரட்டுவதிலேயே உள்ளது என்பதை மார்க்சியம் போதிக்கிறது. தன்னை சாதி நீக்கம் செய்து கொண்டவராலேயே வர்க்க நீக்கம் செய்து கொண்டவராலேயே இத்தகைய வர்க்கக் கடமையை செய்ய முடியும். கம்யூனிஸ்டுகள் மட்டுமே செய்ய முடிந்த காரியம் இது என்பதற்கு முன்மாதிரியாக பி. சீனிவாசராவ் விளங்குகிறார்.

இவ்வாறு நிலவும் உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் வர்க்கம் மற்றும் சாதிகளை மார்க்சியம் விளக்கும் வேளையில் ‘சாதிதான் வேலைப் பிரிவினையை கொண்டு வந்தது என்று கருத்து முதல்வாத பார்வையில் இந்தியாவில் சமூக சீர்திருத்தகாரர்கள் கூறிவருகிறார்கள். ஆனால், இச் சமூக சீர்திருத்தகாரர்கள் எல்லாம் பிறப்பதற்கு முன்பே இந்தியாவை சமூக – பொருளிய நோக்கில் ஆராய்ந்து மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி விளக்கியுள்ளார். அதன்படி வேலைப் பிரிவினையினால் உண்டான உழைக்கும் சாதி நின்று நிலைத்த கிராம சமுதாய அமைப்பும், அது சுயதேவை பூர்த்தி அல்லது தன்னிறைவு கிராமங்களாக இருப்பதும் சரக்கு என்ற பொருளில் உற்பத்தி இன்மையும் நிலவியது. ஆனால், நவீனமாந் தன்மைக்கு ஆட்பட்டு முதலாளித்துவ உற்பத்தி முறைச் சமூகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு சாதி அமைப்பு தகரும். பிரிட்டிஷ் ஆட்சியின் ரயில் இருப்புப்பாதை அமைத்தல் மற்றும் தொழில்துறை ஏற்பாடுகளால் இது நிகழும் என்று மார்க்ஸ் கூறியதும் நிகழ்ந்தது. உற்பத்தி முறை வளர்ச்சிக்கு ஏற்ப முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளும் சாதி அமைப்புக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இந்நிலையில்தான் சாதிபேதம் அற்ற, வர்க்க பேதமற்ற சமுதாயத்தை படைக்கும் லட்சியத்தோடு காவிரி படுகைக்கு புறப்பட்டுச் சென்ற பி. சீனிவாசராவ் சாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்களை அணி திரட்டி கம்யூனிஸ்டுகளின் தளமாக கட்டி எழுப்பினார். தேசத்தின் பெரும் பங்கினரான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சாதி கடந்து வர்க்கமாக அணி திரள்வதன் மூலமாக தொழிலாளர்கள், அறிவுத் துறையினரின் ஆற்றல்மிக்க அணி சேர்க்கை ஏற்பட்டு இந்திய புரட்சி சாத்தியப்படும் என்ற இலட்சியத்துடன் 1930 களில் தொடங்கிய இத்தகைய விவசாயிகள் எழுச்சியால் நில உச்சவரம்புச் சட்டம் முதலியன கொண்டுவரப்பட்டன. விடுதலைக்குப் பிறகு விவசாயத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையை புகுத்தியதும் தொடர்ந்து பசுமைப் புரட்சிக்கான திட்டங்கள் உருவானதும் முதல் கட்டமாகும். நிலப்பிரபுத்துவ நிலக் குவியலுக்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அரசு எதேச்சாதிகாரத்திற்கு எதிராகவுமான விவசாயக் கிளர்ச்சிகளால் ஏற்பட்ட மாற்றமாக இது அமைந்துள்ளது.

இரண்டாம் கட்டம் 1960 களில் தொடங்கப் பட்ட பொருளாதார திட்டங்கள் விவசாயத்தை சரக்கு உற்பத்தியாக முழுமையாக மாற்றியமைத்து விட்டது. பழைய நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்து சிறு – நடுத்தர விவசாயிகளை ஆதாரமாக கொண்ட முதலாளித்துவ வர்க்கங்களின் உற்பத்தி உறவுகளை உருவாக்கியது. சிறு அளவிலான முதலாளித்துவ பணக்கார விவசாயிகள் கிராமப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமாகவும் நிலவுடைமை விவசாயிகளின் அரசியல் பிரதிநிதிகளாகவும் வளர்ந்தனர். 1961 க்குப் பிறகு சாகுபடி முறையிலும் நீர்ப்பாசன முறைகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் விவசாய அமைப்பில் வர்க்க/ சாதி ஏற்பாட்டில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. விவசாய உற்பத்தி முறையில் மேல் சாதி சார்ந்த பாரம்பரிய நில ஆதிக்கம் உடைந்து இடைச்சாதி நிலவுடைமையாளர்கள் பெருகியுள்ளனர். அதே வேளையில், தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மிகப் பெரும்பான்மையோரும் பின் தங்கிய வகுப்பினரில் உள்ள விளிம்புநிலை விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களாக ஆக்கப்பட்டனர். இச்சூழலில் முதலாளித்துவ வகைப்பட்ட சாதி அரசியல் உருவானது. முதலாளித்துவ வர்க்க நலனைக் கொண்ட சாதியின் பெயரால் இம்மக்களை பிளவு படுத்தி அரசியல் செய்கிற சாதிய அடையாள அரசியல்வாதிகள் தொழிலாளர் வர்க்க நலன் சார்ந்தும் சாதி ஒழிப்பு போரிலும் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகளைப் பார்த்து ‘வெறும் பொருளாதார போராட்டம் நடத்தக்கூடியவர்கள் ; கூலிப்பிரச்சினைக்கு போராடுவார்கள். சாதி பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வில்லை என்று எதிர்ப்பு பேசி வளர்ச்சி கண்டனர்‌.

மூன்றாம் கட்டத்தில்(1991க்குப் பிறகு) பசுமைப் புரட்சியின் தோல்வி, விவசாயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது‌. ஆனால், 60 சதவீதம் தொழிலாளர்கள் விவசாயத்தை சார்ந்துள்ள நிலை நீடிக்கிறது. முதலாளித்துவ உலகமயமாக்கமும் உலக வர்த்தக அமைப்பும் பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் உள்நுழைவும் விவசாயிகளின் நிலப் பறிப்புக்கு காரணம் ஆயின. சிறு விவசாயிகள் விவசாயத்தை தொடர முடியாத நிலை, சாகுபடி பரப்பளவு குறைந்து தரிசாக விடப்படுவதும் தொடர்கிறது. கடன் வசதி, மின்சார வசதி,நீர்பாசனம் போன்றவை சரிவர கிடைக்காமையாலும், விதைகள்-உரங்கள் அளிப்பில் பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம், விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட மானியம் ரத்து ,விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலையின்மை முதலிய காரணங்கள் சிறு, குறு விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கிறது. விவசாயத்திலிருந்து வெளியேற காரணமாகின்றன. சாகுபடிப் பரப்பு குறைந்து கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் நகரம் சார்ந்து தமிழ்நாட்டுக்குள்ளும், வெளிமாநிலங்களுக்கும் பிழைப்புக்காக குடிபெயர்வது தீவிரமாகி விட்டது. டெல்டா மாவட்டங்களில் பெரும்பான்மையும் தாழ்த்தப்பட்ட மக்களும், மற்ற பகுதிகளில் நிலமற்ற பின்தங்கிய வகுப்பாரும் தாழ்த்தப்பட்ட மக்களும் விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். இன்றைய முதலாளித்துவ விவசாய உற்பத்தி முறையால் பணக்கூலியும் குறிப்பிட்ட வேலைக்கென ஒப்பந்தத் தொழிலாளர் முறையும், பயிர் வாரி தொழிலாளர் முறையும் வளர்ந்துள்ளது. இது தன்னியல்பான கூலி பேரத்துக்கான ஆற்றலையும் விவசாயத் தொழிலாளர்களி டையே ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இடதுசாரிகளின் போராட்டத்தால் கிடைத்த என்.ஆர்.ஜி.எஸ். திட்டம் கூலி பேரத்துக்கான ஆற்றலை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

மக்களிடையே நிலவும் சாதிய- வட்டார பிரிவினைகள் அவர்களை வர்க்கமாக ஒன்றிணைய விடாமல் தடுத்து வர்க்க அரசியலுக்கு மாற்றாக அடையாள அரசியலை முன்வைப்பதுடன் இத்தகைய பிளவுகளை மேலும் தீவிரமடையச் செய்கின்றன என்று தோழர் தேவ. பேரின்பன் அவர்கள் தமது “ வர்க்கமாக திரட்டப் படவேண்டிய விவசாய வர்க்கம்“என்ற கட்டுரையில் அடையாள அரசியலின் ஆபத்தை விளக்குகின்றார்.

“இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது” என்று மகாத்மா காந்தி அவர்கள் உணர்ந்து கூறியதைப் போன்றும், மார்க்சை கற்றுத் தெளிந்த பி.எஸ்.ஆர் இந்தியப் புரட்சியின் திறவுகோல் கிராம சமுதாயமே என்று தேடிச்சென்று சாதிய அமைப்புக்கு அடி கொடுத்து நிலப்பிரபுத்துவ அதிகார வர்க்கத்துக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்டி முதலாம் கட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியது போன்றும் நாமும் வர்க்க அணிதிரட்டலுக்கு தயாராவோம். முதலாளித்துவ அதிகார வர்க்கம் தம்மை தக்கவைத்துக் கொள்ள மீண்டும் பிரிவினைகளை பிளவுகளை கூர்மைப்படுத்தி தனித்தனியே விலக்கி வைத்து அடையாளங்களின் பேரால் வர்க்கமாக ஒன்றிணைய விடாமல் தடுக்கும் வகையில் சாதி,மதம், இனம், மொழி, இடம், பால், ஆகிய அடையாளங்களின் பேரால் மேற்கொள்ளும் அடையாள அரசியல் ஏகாதிபத்திய, உலகமயச் சூழலில் நமக்கான சவாலாகவே அமைந்துள்ளது. எல்லா சாதிகளுக்குள்ளும் உழைக்கும் வர்க்கம் உழைப்பை சுரண்டும் வர்க்கம் நிலவுகிறது. எனவே, எவ்வித சாதியானாலும் உழைப்பை சுரண்டும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக சுரண்டலுக்கு உள்ளான் உழைக்கும் வர்க்கம் வர்க்கமாக திரட்டப் படவேண்டும்.இதனை புரிந்துகொள்ள நமக்கு பி. எஸ்.ஆரே வழிகாட்டி ஆவார். அவர் நினைவைப் போற்றி அவர் வழி நடப்போம் –
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தொடர்புக்கு : 9445283135

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button